search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை வழிச்சாலை"

    8 வழிச்சாலை திட்ட தொடர்பான வழக்கில் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்று தம்பித்துரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad #ThambiDurai

    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கில் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்கள் அமைய நீதி துறை தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    மு.க.அழகிரி பேரணி நடத்த அவருக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

    தமிழிசை - மாணவி சோபியா வாக்குவாதம் சம்பவம் பற்றி முழுமையாக எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #ThambiDurai

    செங்கத்தில் அரசுக்கு எதிராக போராடியதாக 14 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. #greenwayroad
    செங்கம்:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலைக்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி செங்கம் மேல்வணக்கம்பாடி காந்திநகரை சேர்ந்த சேகர் என்ற விவசாயி தன்னுடைய நிலம் கைப்பற்றப்பட்டதால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில், செங்கம் தாலுகாவிற்குட்பட்ட நீப்பந்துறை முதல் நயம்பாடி வரை 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சேகருக்கு அஞ்சலி செலுத்தி பசுமை சாலை பணியை நிறுத்தக்கோரி ஒன்றிணைந்து பேரணி சென்று போராட்டம் நடத்த போவதாக தகவல் பரவியது.

    இதையறிந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கம் தாலுகா முறையாறு பகுதியை சேர்ந்த விவசாயி கருணாநிதி (55), மண்மலை இளங்கோ (45), அத்திப்பாடி செல்வராஜ் (50) மற்றும் புதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் ஆகியோர் உள்பட மொத்தம் 14 விவசாயிகளை வீடு புகுந்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.

    மேலும் கரியமங்கலம், நீப்பந்துறை, கட்டமடுவு உள்பட பல்வேறு கிராமங்களிலும் போலீசார் நள்ளிரவு முதல் விடிய, விடிய விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று கதவை தட்டி கைது செய்வதாக கூறி தொந்தரவு செய்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் போலீசாருக்கு பயந்து ஊரை விட்டு வெளியே சென்று தலைமறைவாகினர்.

    கைது செய்யப்பட்ட விவசாயிகளில் செல்வராஜ் என்பவர் தர்மபுரி மாவட்டம் ஆத்திப்பாடியை சேர்ந்தவர். இவருடைய நிலம், செங்கம் பகுதியில் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 14 பேர் மீதும் அரசுக்கு எதிராக போராடியதாக 151-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். செங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    நேற்றிரவு கைது செய்யப்பட்ட 14 விவசாயிகளையும் சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர். அவர்களிடம் 8 வழிச்சாலைக்கு எதிராக நடைப்பயணம், பேரணி, போராட்டம் என ஈடுபட்டால் அதிகபட்ச நடவடிக்கை பாயும் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுப்பற்றி விவசாயிகள் கூறுகையில், 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை பாதிப்பாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், விவசாயிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.

    நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த எங்களை நள்ளிரவில் கைது செய்வதற்கு நாங்கள் தேச விரோதிகளா? என்று குமுறினர்.

    இதற்கிடையே, செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான போலீசார் விவசாயிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் காணப்படுகிறது. #greenwayroad
    பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க டாக்டர் அன்புமணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கான நில ஆர்ஜித பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எதிர்ப்பையும் மீறி பல்வேறு பகுதிகளில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது.

    இந்நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவரும் தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்தித்து அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். சில இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், தர்மபுரி தொகுதியில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.


    இதை எதிர்த்து பாமக துணை பொது செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, அன்புமணி ராமதாஸ் தலைமையில் தர்மபுரியில் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. #GreenExpressway #AnbumaniFeedbackMeeting 
    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் கருத்துக்கு வாய்ப்பூட்டு போடக்கூடாது என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #GreenWayRoad #MKStalin

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை தீட்டினாலும் மக்கள் நலனுக்காகவே தீட்டுகிறது. மக்கள் சுதந்திரமான கருத்துக்களை தெரிவிப்பதே இந்திய அரசின் சிறப்பான வழிமுறை.

    இந்த சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளும், மக்களும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க விடாமல் காவல்துறையினர் வாய்ப்பூட்டு போடும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுக் கூட்டம் நடத்த த.மா.கா.வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பா.ம.க. பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     


    மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் அதை தடுக்கும் வகையில் கைது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

    இவ்வாறு செய்வதால் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு எதிராக எதையும் செய்துவிட முடியாது. சேலம் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களிடம் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. எனவே மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து நிபுணர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

    ஜனநாயக நாட்டில் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக நடந்து கொண்ட அரசு வீழ்ந்ததுதான் வரலாறு. எனவே இந்த போக்கை அரசு கைவிட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியிலும் இது போன்ற சாலைகள் அமைக்கப்பட்டன. அதற்கான நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் மக்களிடம் எதிர்ப்பு இல்லை. இப்போது மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே தான் மாற்று பாதை அமைக்க வலியுறுத்துகிறோம். #GreenWayRoad #MKStalin

    சேலம் சென்னை இடையே அமையவுள்ள 8 வழிச்சாலையின் திட்டம் மற்றும் பயன்பாடு குறித்து முழுமையாக அறியாமல் அதனை எதிர்க்க கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். #GreenWayPlan #HC
    சென்னை:

    சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலையை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அதிகமான நிவாரணம், மாற்று நிலம் என பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்தாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த திட்டம் எதிர்ப்பையே சம்பாதிக்கிறது.

    இந்நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய த.மா.கா.வின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா, திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் தெரியாமல் அதனை எதிர்க்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், இரு பெருநகரங்களுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த சாலையால் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் எனவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் கருத்து கேட்ட போது பல்வேறு வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கூறியுள்ளார்.  #GreenWayPlan #HC
    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை எதிர்ப்பது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்த கறுப்பு கொடி போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துள்ளது. #GreenWayRoad
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

    ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னை வரையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி சாலைத் திட்டம் ஒன்றை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த முற்பட்டுள்ளன. இதனால் ஐந்து மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளை நிலங்களும் குடியிருப்புகளும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்படுபவர்களின் கருத்தை அறியாமலும், ஒப்புதலை பெறாமலும், பயமுறுத்தி பலவந்தப்படுத்தி நிலங்களைப் பறிப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது. மறுப்பு தெரிவிக்கும் மக்களை பொய் வழக்கு போட்டு கைது செய்கிறது. இந்த அடக்குமுறையைக் கண்டித்தும் நிலப்பறிப்பை எதிர்த்தும் 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி அறவழியில் போராடுவதென்று முடிவு செய்துள்ளனர். நாளை (26-ந்தேதி) நடைபெறும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GreenWayRoad
    பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கிறார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalanisamy
    சேலம்:

    சென்னையில் இருந்து நேற்று சேலத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே?.

    பதில்:- ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான உறுப்பினர்களை 4 மாநிலமும் வழங்க வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையிலே, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. ஆனால், கர்நாடக மாநில அரசு மட்டும் அவர்களுடைய பிரதிநிதிகளை பரிந்துரைக்காத காரணத்தினால், மத்திய அரசு, தானாக கர்நாடகத்திற்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கிறது.



    கேள்வி:- தொடர்ந்து நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீர், இந்த மாதம் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?.

    பதில்:- ஒவ்வொரு மாதமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு 10 நாட்களுக்கு ஒரு முறை அதைக் கணக்கிட்டு, நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதை ஆணையம் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தும்.

    கேள்வி:- பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலைமாறி, இன்றைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே?.

    பதில்:- சுமார் 56 கிலோ மீட்டருக்கு தர்மபுரியில் எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது. சேலத்தை பொறுத்தவரை 30 கிலோ மீட்டருக்கு எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது, இன்னும் 6 கிலோ மீட்டர் மட்டும் நடப்படவேண்டியிருக்கிறது. இதில், 100-க்கு 4 அல்லது 5 விவசாயிகள் தங்களுடைய நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நிலங் களை பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு தாமாக முன்வந்து வழங்கி இருக்கின்றார்கள்.

    இந்த பசுமை வழிச்சாலை மிக முக்கியமான சாலை, உங்களுக்கே நன்றாகத் தெரியும். 2006-ம் ஆண்டு என்று கருதுகின்றேன், கிருஷ்ணகிரியில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுரை, திருச்சி செல்கின்ற சாலை, அதேபோல, உளுந்தூர்பேட்டை சாலை இரண்டும் கிட்டத்தட்ட 2006-ல் அமைக்கப்பட்டது.

    2009-ல் இருந்து 2011 வரை உளுந்தூர்பேட்டை சாலை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் அப்பொழுது வாகனங்களுடைய எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சம். தற்போது வாகனங்களுடைய எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம், எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கேற்றவாறு சாலைகளை உருவாக்குவது அரசினுடைய கடமையாகும். அதற்கு மத்திய அரசாங்கம் இப்பொழுது முன்வந்து, இந்த பசுமை வழிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அதற்கு மாநில அரசும் உதவி செய்கிறது.

    கேள்வி:- இழப்பீட்டைப் பொறுத்தவரை இன்னும் கொஞ்சம்.....

    பதில்:- அதாவது, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் வாயிலாக, தங்கள் பகுதியில் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்கூட பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

    கேள்வி:- அரசியல் கட்சிகள் மறியல் செய்தால், அன்றைக்கு மாலையே விடப்படும் சூழ்நிலைமாறி அவர்கள் மீது வழக்கு பதியக்கூடிய சூழ்நிலை.....

    பதில்:- இதுவரைக்கும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றது, யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக அவர் கள் நடந்து கொள்கின்றபொழுதுதான் கைது செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. இன்றைக்கு நாமக்கல்லைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றீர்கள். கவர்னர் அங்கே வருகின்றபொழுது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் கருப்புக்கொடி காட்டுவதைத் தவிர்த்து, வேறு இடத்திலே, சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துகின்ற விதத்திலே காட்ட முற்பட்ட காரணத்தினால்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலை அவர்களை கைது செய்ய வேண்டி வந்தது.

    கேள்வி:- விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது பற்றி.....

    பதில்:- ஏற்கனவே நிலம் எடுக் கப்பட்டிருக்கிறது, இப்பொழுது நாங்கள்வந்து எடுக்கவில்லை. ஏற்கனவே, முந்தைய காலத்திலே இருந்து நிலம் எடுக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற ஒரு சூழ்நிலை. சேலத்தில் பார்த்தீர்களானால், ராணுவ வழித்தடம் வரவிருக்கிறது, இன்னும் தொழிற்சாலை அதிகமாக வரவேண்டும். படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் என்று சொன்னால், அந்த பகுதியிலே தொழில் வளர்ச்சி சிறக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலைகள் நம்முடைய பகுதியில் வருவதற்கு இன்றைக்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்த விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.

    கேள்வி:- இது தொடர்பாக ஒரு கருத்துகூட கேட்டவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கிறதே.....

    பதில்:- இதுவரை 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் கூடியிருக்கிறது, 1200 பேருக்கு மேல், இந்தக் கூட்டங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய சேலம் மாவட்டத்தில் 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, ஆங்காங்கே தாலுகா அளவில் நடத்தியிருக்கிறார்கள்.

    கேள்வி:- நில மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?

    பதில்:- இதுவரை இல்லாதவகையில் ஏழைகளுக்கு அதிகமான நில இழப்பீடு வழங்கப்படும். கடந்த காலத்தில் தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அப்பொழுதெல்லாம் நில இழப்பீட்டுத்தொகை குறைவாகத்தான் கொடுத்தார்கள். இன்றைக்கு அப்படியல்ல, ஏற்கனவே நம்முடைய மாவட்ட கலெக்டர், பலன் கொடுக்கின்ற மரங்களுக்கு என்னென்ன வகையிலே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்.

    அதுமட்டுமல்ல, வீடுகளுக்கும், அதேபோல ஓட்டு வீடுகளுக்கும், தேய்மானம் இல்லாமல், கடந்த காலத்தில் தேய்மானங்களை கணக்கிட்டுத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள், அதையெல்லாம் தவிர்த்து, தேவையான அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

    அதுமட்டுமல்லாமல், பசுமை வழிச்சாலை அமைக் கின்றபொழுது, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள், இழந்தால், அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான இடத்தைக் கொடுத்து, பசுமை வீடுகள் அவர்களுக்கு அரசு கட்டிக்கொடுக்கின்றது.

    கேள்வி:- இரும்பு ஆலையை தனியார் மயமாக்கத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார்களே?.

    பதில்:- இது மத்திய அரசாங் கத்தின் கீழ் வருகிறது. நம்முடைய இரும்பு ஆலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலே, இதை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும், பிரதமருக்கும், மத்திய அரசினுடைய துறை மந்திரிகளுக்கும் கடிதம் மூலமாக, இதை தனியார் மயமாக ஆக்கக்கூடாது என்ற, தமிழக மக்களுடைய உணர்வை பிரதிபலிக்கின்ற விதத்திலே கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்திலும், இதை வலியுறுத்தி பேசப்பட்டிருக்கின்றது.

    கேள்வி:- தொடர்ந்து எம்.பி.க்கள் பேசுவார்களா?.

    பதில்:- ஏற்கனவே பேசப்பட்டது, பேசிக் கொண்டிருக்கிறார் கள், இன்னும் பேசுவார்கள்.

    கேள்வி:- குறிப்பாக 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு மிகவும் விமர்சிக்கப்படுகிறது.....

    பதில்:- தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நீதிமன்றம் என்பது ஒரு பொதுவானது. ஆகவே, அந்த நீதிமன்றத்தை விமர்சிப்பதை அனைவரும் தவிர்க்கவேண்டும்.

    கேள்வி:- எந்த மாதிரியான நடவடிக்கை இருக்கும்?

    பதில்:- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது, இதைப்பற்றி பேசுவது முறையாக இல்லை.

    கேள்வி:- நீதிமன்ற தீர்ப்பு வந்தபொழுது அதை விமர்சிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டியிருக்கிறாரே?

    பதில்:- நேற்றையதினம்கூட, தலைமை நீதிபதியே தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லியிருக்கின்றார்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.  #EdappadiPalanisamy #Tamilnews 
    சென்னை - சேலம் விரைவு சாலை அமைக்க விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #EdappadiPalaniswami #ChennaiSelamExpressWay
    சேலம்:

    சென்னை - சேலம் எட்டுவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை - சேலம் விரைவு சாலைக்கான எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர். நிலம் கொடுப்பவர்களுக்கு முந்தைய காலங்களை விட அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகரிக்கும் போது, சாலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

    போராட்டத்தில் ஈடுபடுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாலே கைது செய்யப்படுகின்றனர். நீதிமன்றம் என்பது பொதுவானது. அதன் தீர்ப்பை யாரும் விமர்சிக்க உரிமை இல்லை. சேலம் இரும்பாலை தனியார்மயம் ஆவதை பிரதமர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் தேசதுரோகிகள் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். #Greenwayroad #MinisterPandiarajan

    ராயபுரம்:

    வட சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மீட்பு வெற்றி பொதுக் கூட்டம் கொருக்குப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தங்கத்தமிழ்செல்வன் வீரத்தை பாராட்டுகிறேன். வெகு விரைவில் ஆண்டிப்பட்டியில் தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு வழி வகுத்த தங்கத் தமிழ் செல்வனுக்கு நன்றி.

     


    பசுமை வழி சாலை திட்டம் மத்திய அரசிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் கோடி நிதி பெற்று செயல்படுத்தபடும் மிக பெரிய திட்டமாகும். இந்த திட்டம் மிக பெரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். விவசாய நிலங்களை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவது உண்மை இல்லை அவர்களை திசை திருப்பி தூண்டி விடுவது மிக பெரிய தேசதுரோகம்.

    தினகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் ஆர்.கே நகரில் விரைவில் இடைதேர்தல் வரும். ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று கொடுத்த வாக்குகுறுதிகளை நிறைவேற்றும்.

    தினகரன் ஆர்.கே நகர் வருவதில்லை என்பதை விட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இல்லை என்பதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நடிகர் ராம ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #Greenwayroad #MinisterPandiarajan

    சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். #greenwayroad #vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திடத் தமிழக அரசு முனைந்துள்ளது. இதனால் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகள், விளை நிலங்கள், கஞ்ச மலை, ஜருகு மலை, கல்ராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை ஆகிய மலைகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளும், லட்சக்கணக்கான மரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

    ம.தி.மு.க. எந்த வளர்ச்சித்திட்டங்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு? என்பதுதான் எங்கள் கேள்வி. பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று எடப்பாடி பழனிசாமி மார்தட்டுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.



    எனவே பசுமையை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இயற்கையை காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சேலம் பியூஸ் மனுஷ், மாணவி வளர்மதி போன்றவர்களை, சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #greenwayroad #vaiko
    பசுமை வழிச்சாலைக்கு எதிராக கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக திருவண்ணாமலை விவசாய சங்க நிர்வாகிகள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    சேலம்-சென்னை இடையே 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீட்டர் தூரம் இந்த சாலை அமைகிறது. இதனால் 92-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.

    8 வழிச்சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்த உள்ள நிலங்களின் சர்வே எண், பரப்பளவு, நிலத்தின் வகை போன்ற விபரங்களை அதிகாரப்பூர்வமாக நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    அதில் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள், வீடுகள், பாசன கிணறுகள் இடம் பெற்றுள்ளன.

    அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை மிகவும் குறைவாகவே கையகப்படுத்த உள்ளனர். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய தாலுக்களில் உள்ள கிராம மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்கள் ஆட்சேபனைகள் தெரிவிக்க 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் அதற்கு முன்பாகவே நிலத்தின் எல்லைப் பகுதியை குறியிடும் பணியை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களில் குறியீடு பதித்த கற்களை நடும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் போது போராட்டம், எதிர்ப்பு இருந்தால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கந்தசாமியுடன் எஸ்.பி. பொன்னி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது 8 வழிச்சாலை திட்டத்துக்காக போராட்டம் நடத்த அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள மணிலா உடைக்கும் கமிட்டி கட்டிடத்தில் இன்று காலை விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாகவும்.

    இதில் பசுமை வழிச்சாலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து மங்கலம் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், துணை செயலாளர் பலராமன், ஜெயபால், உமாபதி, தஞ்சன், ஏழுமலை, சின்னபையன், சூரியபிரகாஷ், சின்னராஜ் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கூட்டம் நடைபெற இருந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்க பல எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில், நடிகர் விவேக் பிரேசில் போல் அமைக்க வாய்ப்பிருக்கிறதா என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். #Vivek
    சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.

    ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும். கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.



    இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    ×